![]() |
| Image: Web |
சமீபத்தில் நடந்து முடிந்த கனடா பொதுத் தோ்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆச்சரியமளிக்கத்தக்க வெற்றியை பெற்று அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. ட்ரூடோ இம்முறை வெற்றி பெறமாட்டார் என்றே பெரும்பாலான கருத்துகணிப்புகள் ஆரூடம் சொல்லியிருந்த நிலையில் அதையெல்லாம் பொய்யாக்கி வெற்றியை ருசித்திருக்கிறார் அவர். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் சக கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக கனட கூட்டரசின் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
தமிழர்களின் மனம்கவர்ந்த சர்வதேசத் தலைவராக விளங்கும் ஜஸ்டின் ட்ரூடோ யார்,?
முன்னாள் பிரதமரின் மகன்:
49 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் இரண்டாவது இளமையான பிரதமர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர். மேலும், கனடாவின் முதல் வாரிசு பிரதமர் என்ற பெருமைக்கும் உரியவர். இவரது தந்தையான பொ்ரி ட்ரூடோ கனடாவின் 15வது பிரதமராக இருந்துள்ளார். தந்தையின் இறுதி காலத்தை ஒட்டி அரசியலுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு முன் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். லிபரல் கட்சியில் படிப்படியாக பதவியை அடைந்த இவர், 2015 தோ்தலில் லிபரல் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி வெற்றியை ருசித்தார். அதற்கு முன் 36 இடங்களோடு இருந்த லிபரல் கட்சி இவரின் தலைமையின் கீழ் 184 இடங்களை பிடித்து அபார வெற்றியோடு ஆட்சியை பிடித்தது. பின்னர் 2019-ல் நடந்த தோ்தலிலும் வெற்றி பெறவே, இரண்டாம் முறையாக பிரதமரானார்.
ஹாட்ரிக் அடித்த ட்ரூடோ:
இந்த ஆண்டு முன்னதாகவே தோ்தலை சந்திக்க முடிவெடுத்த ட்ரூடோ கொரோனா சூழலிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். இது கனட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆப்கன் விவகாரம் கூட இந்த தோ்தலில் எதிரொலித்திருந்தது. இவைகளே, ட்ரூடோவின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்றும் ஆரூடங்கள் எழுந்தன. ஆனால், தோ்தல் முடிவுகள் ஆரூடர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த தோ்தலை விட 3 இடங்கள் அதிகம் பெற்று பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் ட்ரூடோ. பெரும்பான்மை கிடைக்கவிட்டாலும் சக கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கிறார்.
வாரிசு அரசியலும் கனடாவும்:
கனடாவின் முதல் வாரிசு பிரதமர் ட்ரூடோ தான். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக பிரதமரானதன் மூலம் உலகின் மேம்பட்ட ஜனநாயக நாடாக திகழும் கனடாவிலேயே வாரிசு அரசியல் விமர்சனங்களை கூர் மழுங்கடித்திருக்கிறார் ட்ரூடோ. முன்னாள் பிரதமரின் வாரிசு ஒருவரை 3-வது முறையாக தொடர்ந்து தோ்ந்தெடுத்திருப்பதின் மூலம் கனட மக்களும் ஒரு செய்தியை உலகுக்கு சொல்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் தலைவர் வாரிசாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள எங்களுக்கு தயக்கமில்லை என்பது தான் அது. மேலும், அரசியலில் இருக்கும் திறமையான தலைவர்களுக்கு அவர்கள் இன்னவரின் வாரிசு என்பதே தகுதிக் குறைவாக ஆகாது என்றும் கனட மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
கனடாவின் எம்ஜிஆர், ஸ்டாலின்.!
சுருங்கச் சொல்வதானால் 3-வது முறையாக ஆட்சியை பிடித்ததன் மூலம் கனடாவின் எம்ஜிஆராகவும், வாரிசாக வந்து தந்தை மறைவிற்கு பின் நாட்டை
ஆளும் வாய்ப்பை பெற்றதன் மூலம் கனடாவின் மு.க.ஸ்டாலினாகவும் உருவாகி நிற்கிறார் கனடா கூட்டரசின் பிரதமர் திரு. ஜஸ்டின் ட்ரூடோ.!

கருத்துகள்
கருத்துரையிடுக